34508
page-template/template_concern_page.php

0
page-template/template_concern_page.php

கருவளையங்கள்: காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்

Highlights

  • ● NCBI அமைப்பு நடத்திய ஆய்வின்படி, இத்தகைய கருவளையங்கள் ஆண்களை விடப் பெண்களுக்கே அதிகம் தோன்றுகின்றன. 16 முதல் 25 வயதுடையவர்களில் ஏறக்குறைய 47.50% பேருக்கு இத்தகைய கருவளையங்கள் தோன்றுகின்றன.
  • ● மரபுவழிக் காரணங்கள் கருவளையங்கள் தோன்ற முக்கிய காரணங்களாக அமைகின்றன.
  • ● சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் கருவளையங்கள் நிரந்தரமாகத் தங்கி விடலாம்.
  • ● நன்கு பரிசோதித்து சரியான சிகிச்சைகள் வழங்கப்பட்டால் கருவளையங்களை குணப்படுத்த முடியும்.

கருவளையங்கள் என்பவை என்ன?

பொதுவாக கண்களுக்குக் கீழே அல்லது கண்களைச் சுற்றி சருமம் கருமை அடைவதையோ நிறமிழப்பதையோ “கருவளையங்கள்” என்று குறிப்பிடுகின்றோம். பாதிக்கப்பட்ட இடத்தில் சருமம் நீலம், கருப்பு அல்லது அடர்ந்த பிரவுன் நிறத்தில் இருக்கலாம். இதை மருத்துவ ரீதியாக Periorbital Hyperpigmentation (POH), Periorbital Melanosis, Infraorbital Darkening, Infraorbital Discoloration மற்றும் Periorbital dark circles என்று பலவாறு குறிப்பிடுவார்கள்.

இவை உருவாவதற்கான காரணங்கள் என்ன?

கருவளையங்கள் தோன்ற ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்கள் இணைந்து காரணமாகலாம். அவற்றைப் பொதுவாக மருத்துவர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பார்கள். பரவலான சில காரணங்கள் இவை:

  1. உள்ளார்ந்த காரணங்கள் அல்லது பரம்பரைக் காரணங்கள்
  • பரம்பரைக் காரணங்கள் (அல்லது Constitutional POH) –நமது மரபணுக்கள் மட்டுமே நமது உடலில் மெலனின் சுரக்கும் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. மெலனின் உடல் முழுவதும் பரவும் விதத்தையும் அவைதான் நிர்ணயிக்கிறது. இதனால் நமது கண்களைச் சுற்றியுள்ள சருமத்தின் நிறமும் பாதிக்கப்படுகிறது.
  • ஊட்டச்சத்துக் குறைபாடு – நமது உடலில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் K குறைபாடுகள் இருந்தாலும் கண்களின் கீழே நிறமிழப்பு ஏற்படலாம்.
  • பெரி ஆர்பிட்டல் எடிமா – கண்களைச் சுற்றி நீர் கோர்த்துக் கொள்ளும் போது இவ்வாறு ஏற்படுகிறது. அப்போது கண்கள் வீங்கியது போலக் காணப்படும். ஒவ்வாமை, உப்பு மற்றும் நீர் கோர்த்துக் கொள்ளுதல், உயர் இரத்த அழுத்தம், மருத்துவ ரீதியான குறைபாடுகள் (g. கல்லீரல், தைராய்ட், சிறுநீரகப் பிரச்சனைகள்) மற்றும் சைனஸ் தொற்று போன்ற பல காரணங்களால் இப்படி ஏற்படலாம். இத்தகைய வீக்கத்திற்கு பிறகு சருமத்தின் நிறம் மாறுபடலாம்.
  • வெளிப்படையாகப் புடைத்திருக்கும் இரத்த நாளங்கள் – மேலே உள்ள சருமம் மிகவும் மெல்லியதாக இருந்தால், சருமத்தின் கீழே உள்ள இரத்த நாளங்கள் இன்னும் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். முக்கியமாக தமனிகளைச் சுற்றி இப்படி அமைவதால், கண்களைச் சுற்றியுள்ள இடம் கருமையாக அடர் நிறமாகி விடும்.
  • வயதாகுதல் – நமக்கு வயதாகும் போது நமது சருமத்தில் உள்ள கொலாஜன் குறைகிறது. எனவே சருமத்தில் அடர்ந்த நிறம் உண்டாகுதல், தொங்கிப்போகுதல், மெல்லிய கோடுகள் ஏற்படுதல், சுருக்கங்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படலாம். கண்களுக்குக் கீழே உள்ள சருமமும் மிகவும் மெலிதாக மாறுகிறது. அங்கேயுள்ள இரத்தக் குழாய்கள் மேலும் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கின்றன.
  • கண்ணீர் பை – இது பொதுவாக வயதாக ஆக ஏற்படும் ஒரு மாற்றம். நமக்கு வயதாகும்போது கொழுப்பு சத்து குறையும் போது மேல் தோல் மெலிதாகிறது. கன்னப் பகுதி கீழே இறங்குகிறது. எனவே கண்கள் குழிக்குள் இருப்பதைப் போலத் தோற்றமளிக்கும். மேலும் கண்களின் நிழலும் கண்களுக்குக் கீழேயே விழுவதால் கருவளையங்கள் போலத் தோற்றமளிக்கும்.
  • அகான்தோஸிஸ் நிக்ரிகான்ஸ் – கண்களைச் சுற்றியுள்ள சருமம் நன்கு கனமாகி வெல்வெட் போன்று அடர்நிற வண்ணத்தில் தெரியும். நமது உடலில் இன்சுலினின் ஏற்றத்தாழ்வுகள், வேறு சில வளர்சிதை குறைபாடுகள் (metabolic disorders) போன்றவற்றால் இவ்வாறு நேரலாம்.
  • வீக்கத்திற்குப் பிறகு சில சமயங்களில் அடர்ந்த நிறத்துடன் இவை தோன்றலாம். டெர்மல் மெலனோசைடோஸிஸ் மற்றும் பிக்மெண்ட்ரி டிமார்க்கேஷன் லைன்ஸ் போன்ற சில காரணங்களாலும் இவை ஏற்படலாம்.
  1. வெளிப்புறக் காரணங்கள்
  • மிகுந்த சோர்வு மற்றும் மன அழுத்தம் – சரியான தூக்கமின்மை, சுற்றுச் சூழல் சார்ந்த சில காரணங்கள் மற்றும் மிகுந்த மன அழுத்தம் போன்ற காரணங்களால் கண்களைச் சுற்றியுள்ள தசைகளில் அழுத்தம் ஏற்படலாம்; அவை பாதிக்கப்படலாம். இதனால் பெரும்பாலும் POH ஏற்படலாம். கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் நேரடியாக சோர்வால் ஏற்படாவிட்டாலும் இரண்டும் ஓரளவு தொடர்புடையவையாக இருக்கின்றன.
  • சூரிய ஒளி – நமது சருமத்தின் மேல் நேரடியாக சூரிய ஒளி தொடர்ந்து படும்போது, அதிக மெலனின் சுரப்பதாலும் POH காரணமாக, கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் ஏற்படலாம்.
  • மருந்துகள் – சில சமயங்களில் ஹார்மோன்களின் பிரச்சனைகளைச் சரிசெய்ய எடுத்துக் கொள்ளும் மருந்துகளாலும், கண்களில் இரத்த அழுத்தத்தைச் சீராக்க வழங்கப்படும் சொட்டு மருந்துகள் (ocular hypotensive eyedrops – குளூக்கோமா போன்றவற்றிற்குப் பயன்படுத்தும் மருந்துகள்) போன்றவற்றால் கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் ஏற்படலாம்.
  • மது அருந்துதல் / புகை பிடித்தல் – மிக அதிகமாக மது அருந்தினாலும், புகை பிடித்தாலும் ப்ரீ ஆர்பிடல் ஹைபர்பிக்மெண்டேஷன் அதிகமாகலாம். குறிப்பாக புகைப்பிடித்தல் அதிகமானால், சருமத்தில் இரத்த ஓட்டம் (மைக்ரோ சர்குலேஷன்) அதிகமாகி அதனால் கருவளையங்கள் ஏற்படலாம்.

POH எப்படிக் கண்டறியப்படுகிறது?

இதைக் கண்டறிய பல வழிகள் பின்பற்றப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர் பற்றி அனைத்து விவரங்களும் மிகவும் விரிவாக அறியப்படும். பரம்பரை மற்றும் குடும்பப் பின்னணி போன்றவையும், அவரது வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழலில் உள்ள அழுத்தங்கள் போன்ற பல விஷயங்களை மனதில் கொண்டு, சருமத்தையும் நன்கு பரிசோதித்தால், சரியான காரணங்கள் கண்டறியப்படலாம். அதற்கேற்ப தகுந்த சிகிச்சைகளும் அளிக்கப்படலாம்.

இது வரக்கூடிய ஆபத்து எவருக்கு உண்டு?

சருமநோயியல் பற்றிய ஒரு இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி 51.50% POH உள்ளார்ந்த காரணங்களால் ஏற்படுகிறது. 22.50% வீக்கத்திற்குப் பிறகு ஏற்படுகிறது, தவறான பழக்கவழக்கங்கள் (தூக்கமின்மை போன்றவை) 40% காரணமாக இருந்தது. அடிக்கடி அழகு சாதனங்களைப் பயன்படுத்துதல் (36.65%) அடிக்கடி கண்ணைக் கசக்குதல் (32.50%) கண்களில் ஏற்படும் கிட்டப்பார்வை / தூரப்பார்வை போன்ற பிரச்சனைகளை சரியாக கவனிக்காது விட்டுவிடல் (12%) போன்றவையும் காரணமாக இருந்தன. மேலும் மன அழுத்தம் (71%), ஒவ்வாமை மற்றும் குடும்பத்தில் முன்னோர்க்கு பாதிப்பு இருத்தல் (63%) போன்றவையும் காரணமாக இருந்தன.

சிகிச்சை தேவையா?
கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் இருந்தால் ஒருவர் மிகுந்த சோர்வாகவும், கூடுதலாக வயதானவராகவும் தோன்றுவார். எனவே கருவளையங்கள் தோன்றிய உடனேயே சிகிச்சை அளிக்கப்பட்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இது சார்ந்து வேறு பிரச்சனைகள் இல்லையா என்பதையும் மருத்துவரை ஆலோசித்து தெரிந்து கொள்வது நல்லது.

கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவதை எப்படித் தடுப்பது?

  • போதுமான அளவு தூக்கம் இருந்தால் முகத்தில் உள்ள தசைகளுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். சரியான தூக்கம் இருந்தால் நமது உடல் அந்த சமயத்தில் தன்னை நன்கு புதுப்பித்துக்கொள்ளும்.
  • போதுமான அளவு தண்ணீர் குடித்தல் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இது இயற்கையான முறையில் நமக்கு கிடைக்கும் மாய்ச்சரைசர். மேலும் வேர்வையினால் ஏற்படும் நீரிழப்பையும் இது சரி செய்கிறது.
  • நமது சருமத்தையும் தலைமுடியையும் நன்கு பராமரிக்க, சரியான, சத்தான உணவு எடுத்துக்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதும் குறைத்துக் கொள்வதும் நல்லது.
  • சன்ஸ்க்ரீன் மற்றும் மாய்ச்சரைசர் போன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால் கண்களுக்கு கீழே கருவளையம் வராமல், கண்களைச் சுற்றியுள்ள சருமம் பாதுகாக்கப்படும்.
  • கண்களை அடிக்கடி கசக்குவதைத் தவிர்க்கவும்.

வீட்டிலேயே செய்யும் கை வைத்தியங்கள் பலன் தருமா?

கருவளையங்களைச் சரிசெய்ய எண்ணற்ற கை வைத்தியங்கள் கூறப்படுகின்றன. இவை எந்த அளவு திறம்படச் செயல்பட்டு சருமப் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்பது குறித்து இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனவே இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவற்றில் பயன்படுத்தப்படும் சில பொருட்களின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று சொல்லவே முடியாது; அதனால் சில சமயங்களில் பிரச்சனை அதிகமாகி விடலாம்.

தற்போதுள்ள சிகிச்சைகள்

  • பாதிக்கப்பட்ட இடத்தில் தடவக்கூடிய (ரெடினாய்ட் உள்ள) மருந்துகள், சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் கோஜிக் அமிலம், வைட்டமின் C உள்ள மருந்துகள்
  • கருவளையத்துக்கான பீல்கள்
  • பளிச்சிடவைக்கும் பிரைட்டனிங் பீல்கள்
  • Q-switched YAG லேசர் – ஆழமாக உள்ள பிக்மெண்டேஷனுக்கு
  • MNRF சிகிச்சை – கண்ணுக்குக் கீழே உள்ள மெல்லிய கோடுகள்
  • கண்களின் வெளிப்புற ஓரத்தில் உள்ள மெல்லிய கோடுகளுக்கான போடாக்ஸ் சிகிச்சை
  • கண்ணீர்ப் பைகளுக்கான ஃபில்லர்கள்

கருவளையங்கள் பல காரணங்களால் ஏற்படலாம். சரியான சிகிச்சையும் வாழ்க்கை முறை மாற்றங்களும் கட்டாயமாக மேற்கொள்ளப்படவேண்டும். ஒரு சான்றிதழ் பெற்ற தோல் மருத்துவ நிபுணரின் ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பது நல்லது.

    Talk to Our Experts