34431
page-template/template_concern_page.php

0
page-template/template_concern_page.php

முகப்பருக் கட்டிகள் – காரணங்கள், வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள்

Highlights

  • ● இந்தியாவில் மட்டுமே முகப்பருக் கட்டிகள் 200 - 300 மில்லியன் மக்களுக்கு உண்டாகின்றன.
  • ● பொதுவாக 15 - 40 வயது வரை உள்ளவர்களுக்கு இவை ஏற்படுகின்றன.
  • ● சின்னச் சின்ன வீக்கங்கள், பொறிப்பொறியாக சிறு கட்டிகள், கட்டிகள், பருக்கள், சிவப்பு நிறமடைதல், சில இடங்களில் சருமம் மிகவும் நெகிழ்வடைதல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.
  • ● மருத்துவர்கள் ஆன்டிபயாடிக்ஸ், கிரீம்கள், கிளென்ஸர் பீல்கள் போன்றவை மூலம் இவற்றுக்கு சிகிச்சை அளிக்கலாம்.

முகப்பருக் கட்டிகள் - பொருள் மற்றும் மருத்துவ விளக்கம்

பொதுவாக சருமத்தில் உள்ள பிலோ செபேசியஸ் சுரப்பிகள் பாதிக்கப்படும் போது இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. செபேசியஸ் சுரப்பிகள் மூலம் சீபம் அதிகமாகச் சுரக்கும் போது சருமத்தில் உள்ள மயிர்க்கால்கள் அடைத்துக் கொள்கின்றன. சீபம் என்பது சருமத்தில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய் போன்ற திரவம். மேலும் சருமத்தின் மேற்புரத்தில் சேரும் தூசு போன்றவையும், இறந்துபோன செல்களும் சேர்ந்து அங்கு வீக்கம் உண்டாகி சருமத்தில் சிவந்த நிறமும் ஏற்படுகிறது.

இவ்வாறு ஏற்படும் போது பருக்கள் பல்வேறு விதமாக வெளிப்படுகின்றன – வெள்ளைப் புள்ளிகள், கரும்புள்ளிகள், சீழ்க் கொப்பளங்கள், வட்ட வடிவக் கொப்பளங்கள், சிறு கட்டிகள், கணுக்கள் போன்ற கட்டிகள் (nodules) போன்ற பலவிதமாக இவை வெளிப்பட்டாலும் பொதுவாக பருக்கள் என்றே குறிப்பிடப்படுகின்றன. இவை உடலின் பல பகுதிகளில் தோன்றலாம் – முகம், கழுத்து தோள் பகுதி, மார்பு, கைகள் மற்றும் முதுகு. இவை தோன்றும் போது சருமத்தின் வழவழப்புத் தன்மை பாதிக்கப்பட்டு சொரசொரப்பாகிறது. பெரும்பாலும் வீக்கம், வடு போன்றவை ஏற்படுகின்றன.

பருக்களின் வகைகள் மற்றும் பிரிவுகள்

பருக்களின் வகை, தீவிரம் மற்றும் பரவியிருக்கும் விதம் இவற்றின் அடிப்படையில் தோல் மருத்துவர்கள் பருக்களை கீழ்க்கண்ட பிரிவுகளில் வகைப்படுத்துகிறார்கள் –

  • கிரேடு 1 – இவற்றில் கரும்புள்ளிகள் வெண்புள்ளிகள் மற்றும் சில கட்டிகள் அடங்கும்.
  • கிரேடு 2 – பலவிதமான கட்டிகள், சீழ்க்கட்டிகள், மிகத் தீவிரமாக உள்ள கரும் புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள்.
  • கிரேடு 3 – அதிக எண்ணிக்கையில் கட்டிகள், சீழ்க்கட்டிகள் மற்றும் வீக்கத்துடன் கூடிய கட்டிகள்.
  • கிரேடு 4 – அளவில் பெரிய, வலியைக் கொடுக்கக்கூடிய சீழ்க்கட்டிகள், கட்டிகள், பெரிய சிஸ்ட்கள் மற்றும் abscesses வகைப்படும் கட்டிகள்.

நம் முகத்தில் ஏற்படக்கூடிய சில விதமான பருக்களின் படங்கள்:

whitehead acne on nose
blackheads on nose
papules acne
pustules acne
cystic acne vulgaris
nodular acne vulgaris

பருக் கட்டிகள் வர பொதுவான சில காரணங்கள்

உள்ளார்ந்த காரணங்கள்நமக்கு பருக் கட்டிகள் வர, நமது உடல் சார்ந்த உள்ளார்ந்த காரணங்களுள் சில –

  • பரம்பரை / மரபுவழிக் காரணங்கள் – மரபுவழிக் காரணங்களால் மிகப் பலருக்கு பருக் கட்டிகள் வரும் வாய்ப்பு உண்டு. உங்கள் பெற்றோரில் ஒருவருக்கு மிக அதிகமாக பருக்கள் இருந்தாலோ, அல்லது அவர்களது இளைமைப் பருவத்தில் இருந்திருந்தாலோ உங்களுக்கும் வர வாய்ப்புகள் அதிகம்.
  • ஹார்மோன்கள் – PCOS போன்ற காரணங்களால் நமது உடலில் அதிகமாக சீபம் சுரக்கப்படலாம். அப்போது நமது உடலின் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் தோன்றலாம். அதனால் பருக்கள் தோன்றலாம். சிலருக்கு மாதவிடாய்க் காலம், கருவுற்றிருக்கும் காலம், மாதவிடாய் நிற்கும் காலம் போன்றவற்றின் போது ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வல்களால் பருக்கள் தோன்றும்.

வெளிப்புறக் காரணங்கள் – நமது சுற்றுச் சூழல் சார்ந்த பல காரணங்களாலும் நமது வாழ்க்கை முறை காரணங்களாலும் பல சமயம் நமது சருமம் மிகவும் பாதிக்கப்படும் போது, பருக்கள் தோன்றினால் பாதிப்பு மேலும் அதிகமாகிறது. இத்தகைய காரணங்களுள் சில –

  • மன அழுத்தம் – நமக்கு மிகுந்த மன அழுத்தம் இருந்தால் நமது சருமத்தில் உள்ள செபேசியஸ் சுரப்பிகளின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
  • மருந்துகள் – ஆண்ட்ரேஜென், கார்டிகோஸ்டீராய்ட்கள், DHEA, லித்தியம் போன்ற மருந்துகள் எடுத்துக் கொள்ள நேர்ந்தால், பக்க விளைவுகளாகப் பருக்கள் தோன்றலாம்.
  • உணவு – அதிக அளவில் கிளைசிமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை அடிக்கடி உண்ணும்போது பருக்கள் ஏற்படலாம்.
  • அழகு சாதனப் பொருட்களை சரியாகப் பயன்படுத்தாமை – சருமப் பராமரிப்பு பொருட்கள் மற்றும் சில அழகு சாதனப் பொருட்கள் நமது முகத்தில் உள்ள துவாரங்களை அடைத்து விடக்கூடியவை. அவற்றைப் பயன்படுத்தினால் பருக்கள் வரலாம். இவை மட்டுமின்றி கடுமையான ஸ்க்ரப் மற்றும் எக்ஸ்போலியன்ட்கள் பயன்படுத்தும் போதும் சருமத்தின் மேல் அடுக்கு பாதிக்கப்பட்டு, அதனாலும் பருக்கள் தோன்றலாம்.

பருக்கள் - நோயியல் மற்றும் உடலியல் சார்ந்த விவரங்கள்

அடிப்படையாக 4 காரணங்களால் பருக்கள் தோன்றுவதும், மிக அதிகமாகப் பரவுவதும், தீவிரமடைவதும் நடக்கலாம்.

  • முகம் மற்றும் கழுத்து போன்ற பகுதிகளில் செபேசியஸ் சுரப்பிகள் மிக அதிகமாக இருக்கும். அந்த இடங்களில் அதிகமாக சீபம் சுரந்து அதனால் அதிகமாக பருக்கள் தோன்றலாம்.
  • கூடுதலாக சுரக்கும் சீபம் மற்றும் கெராடினோசைட்கள் மயிர்க்கால்களின் வாய்ப்பகுதியை அடைத்துக் கொள்ளும்.
  • இத்தகைய பருக்களில் உருவாகும் பாக்டீரியாக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளின் காரணமாக மயிர்க்கால்கள் ஒன்றிக் கொள்ளுதல்.
  • நமது உடலிலிருந்து, நமது நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக வெளியேற்றப்படும் சில பொருட்களின் காரணமாக சில சமயம் பருக்களும், கட்டிகளும் தோன்றலாம்.

பருக்கள் தோன்றுவதற்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்

பருக் கட்டிகள் தோன்றுவதற்கான சில அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் –

  • துவாரங்கள் அடைத்துக் கொள்ளுதல் மற்றும் வெண்மையான (அ) ஒளி ஊடுருவக்கூடிய கட்டிகள்.
  • கட்டிகள் மற்றும் தடிப்புகள் போன்றவை தோன்றும்போது வீக்கம் மற்றும் அந்த இடம் சிவந்து போகுதல்.
  • சீழுடன் கூடிய பருக்கள். தொடுவதற்கு மிருதுவாக இருப்பவை.
  • வடுக்கள் மற்றும் கருந்திட்டுக்கள் ஏற்படுதல்.
  • ஆழமான சீழ்க்கட்டிகளுடன் கூடிய நீர்க் கட்டிகள்.

தோல் மருத்துவர் பருக்களை எப்படி கண்டறிவார்?

பொதுவாக பருக் கட்டிகளை அவற்றின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களைக் கொண்டே நன்கு கண்டறிய முடியும். தோல் மருத்துவர் நன்கு பரிசோதித்த பிறகு அதற்குரிய காரணங்களை மதிப்பிட்டு அதற்கேற்ப சரியான சிகிச்சையை அளிப்பார். பொதுவாக ஒருமுறை மருத்துவர் நேரடியாகப் பார்த்தாலே காரணங்களை அவர்களால் கண்டுபிடிக்க முடியும். (உ: ஹார்மோன்கள், உணவு, மருந்துகள் போன்றவை) காரணத்தைக் கண்டறிந்த பிறகு பருக் கட்டிகளின் தீவிரம் மற்றும் அவை எந்த அளவு பரவியுள்ளன (குறைவாக, மிதமாக, தீவிரமாக) என்றும் ஆராய்வார். இவற்றின் அடிப்படையிலே சரியான சிகிச்சையை நிர்ணயிக்க முடியும்.

உங்களுக்கு பருக்கட்டிகள் வரக்கூடிய ஆபத்து உள்ளதா?

இந்தியாவில் மட்டுமே ஒரு வருடத்திற்கு 1 கோடி பேருக்கு பருக் கட்டிகள் வருகின்றன. குடும்பத்தில் முன்னோருக்கு பருக்கள் வந்திருந்தாலும், PCOS போன்ற காரணங்களால் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், வயதுக்கு வரும் பருவமாக இருந்தாலும், கர்ப்பம் தரித்திருந்தாலும், மாதவிடாய் நிற்கும் காலமாக இருந்தாலும் பருக்கள் வர வாய்ப்பு அதிகம். மன அழுத்தம், பரபரப்பு போன்றவை இருந்தாலும், உங்கள் வாழ்க்கைப் பழக்க வழக்கங்கள் காரணமாகவும், பருக்கள் வரும் வாய்ப்பு அதிகம். பருக்கள் அதிகமாக வரத்தோன்றிய உடனேயே விரைவாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். அப்போதுதான் எதிர்காலத்தில் வடுக்கள் ஏற்படாமலும், கருந்திட்டுக்கள் ஏற்படாமலும் இருக்கும்.

பருக்கள் வராமல் தடுத்தல் மற்றும் அவற்றை எதிர்கொள்ளுதல்

  • ஒவ்வொரு நாளும் இருமுறையாவது மிதமான ஒரு கிளென்சர் பயன்படுத்தி, முகத்தை நன்கு கழுவவும். முக்கியமாக உடற்பயிற்சி செய்து நன்கு வியர்த்துக் கொட்டிய பிறகு கட்டாயம் முகம் கழுவ வேண்டும்.
  • கடுமையான இரசாயனப் பொருட்கள் நிறைந்த அழகு சாதனங்கள், சருமப் பாதுகாப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். Non-Comedogenic மற்றும் எண்ணெய் இல்லாத தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • எந்தப் பருவையும் அமுக்கவோ, கிள்ளவோ, சுரண்டவோ கூடாது. அதனால் வீக்கம் அதிகமாகலாம் மற்றும் வலி ஏற்படலாம்.
  • எப்போதும் முகத்தை சன் பிளாக் கிரீம் போட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். சூரிய ஒளி படுமாறு வெளியில் போகும்போதும் மேகமூட்டம் உள்ள நாட்களிலும் கூட கட்டாயம் இதைப் பயன்படுத்தவும்.
  • எப்போதும் சுத்தமாக இருக்கவும். உங்கள் தலையணை உறைகளை வாரத்திற்கு ஒரு முறை மாற்றவும்.
  • எப்போதும் நிறைய தண்ணீர் குடிக்கவும். அப்போது உடலிலிருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறும். பருக்கள் தோன்றுவதும் குறையும்.

தானாகவே சிகிச்சை எடுத்துக்கொள்வது பலன் தருமா?

இத்தகைய வைத்தியங்கள் தற்காலிகமான பலன்களைத் தரலாம். நீண்டகாலப் பலனைத் தராது. குறிப்பாக மிதமான அல்லது அதிக தீவிரமான பருக்களுக்குத் தாமாகவே சிகிச்சை அளித்தால், வடுக்கள் ஏற்படலாம்.

பருக் கட்டிகளுக்கான சிகிச்சைகள்

மிதமான மற்றும் மிகத் தீவிரமான பருக் கட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகள் சில:

மருத்துவ சிகிச்சைகள்

  • தடவக்கூடிய ரெடினாய்ட்கள்
  • தடவக்கூடிய ஆன்டிபயாடிக் கிரீம்கள்
  • உள்ளே எடுத்துக் கொள்ளக்கூடிய மருந்துகள்

பருக்களை நீக்க செய்யப்படும் செயல்முறைகள்

  • கட்டிகளில் கொடுக்கப்படும் Intralesional injections
  • ஹார்மோனல் சிகிச்சைகள்
  • இரசாயன பீல்கள்
  • லேசர் சிகிச்சைகள்

ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கில் பருக்களை நீக்கக்கூடிய மேம்பட்ட சிகிச்சைகளைப் பற்றி அறிய இந்த வீடியோவை பார்க்கவும்.

நோயைப் பற்றிய கணிப்பு

பொதுவாக பதின்பருவத்தில் ஏற்படும் பருக்கள் 20 வயதுக்கு பிறகு தானாகவே மறைந்துவிடும். அதற்குப் பிறகு 40 வயது வரை பெண்களுக்கு வரக்கூடிய பருக்களை சரியாக கவனித்து, மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சையும் வழங்க வேண்டும். வயதானவர்களில் பெரும்பாலானோருக்கு மிதமான தீவிரத்துடன் பருக்கள் தோன்றும். ஆனாலும் அவை மிகக் தீவிரமாக மாறும் முன்பு அவற்றுக்கு சிகிச்சை அளிப்பது அவசியம். பருக்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவை தோன்றிய உடனேயே அவற்றை கவனிக்காமல் விட்டு விட்டால் கண்டிப்பாக வடுக்களை ஏற்படுத்தும்.

    Talk to Our Experts

      Subscribe to Newsletter

      Expert guide to flawless skin and nourished hair from our dermatologists!