பிறக்கும்போதே இருக்கும் அடையாளங்கள் – காரணங்கள், வகைகள், அவற்றைக் கையாளுதல்
Highlights
- ● பிறக்கும்போதே இருக்கும் தனிப்பட்ட அடையாளங்களை பிறவிக்குறிகள் / அழகுக் குறிகள் என்றும் குறிப்பிடுவார்கள். அவை ஆண், பெண் இருவருக்குமே இருக்கும்.
- ● இவை தோன்றுவதும், பரவியிருப்பதும், அவை எந்த வகையைச் சேர்ந்தது என்பதற்கேற்ப மாறுபடும்.
- ● நமது உடலில் பிக்மெண்ட் செல்கள் சரியாக அமையாவிட்டாலோ அல்லது கரு உருவாகும் போதே சில பிக்மெண்ட் செல்கள் (மெலனோசைட்கள்) அல்லது சிறு சிறு இரத்தக் குழாய்கள் பெருகிவிட்டாலோ இத்தகைய பிறவிக் குறிகள் தோன்றலாம்.
- ● குடும்பத்தில் முன்னோர்களுக்கு இத்தகைய பிறவிக் குறிகள் இருந்தாலும் இவை தோன்றலாம்.
- ● இவைகளைக் கையாள தோல் மருத்துவர்கள் உங்களுக்கு உதவலாம். இவற்றுக்கான சிகிச்சைக்குரிய காலம், சிகிச்சை முறைகள் போன்றவை இந்தக் குறிகளின் / அடையாளங்களின் பிரிவு, வகை, அளவு, அமைந்துள்ள இடம் பொருத்து மாறுபடும்.
- ● ஒருவேளை இத்தகைய பிறவிக் குறிகளுக்கு சிகிச்சை அளிக்காமலேயே விட்டு விட்டால் அவற்றுக்கு வேறு சில விளைவுகள் இருக்கலாம். அவை அளவில் பெரியதாகலாம். அந்த இடத்தில் வலி, இரத்தக் கசிவு, அரிப்பு, வீக்கம், புண் போன்றவை ஏற்படலாம். சில சமயங்களில் வயதாகும்போது தானாகவே மறைந்து விடலாம்.
பிறவி அடையாளங்கள் என்பவை என்ன?
பிறவிக் குறிகள் / அடையாளங்கள் என்பவை நமது சருமத்தில், பொதுவாக நிறமிழந்த பகுதிகள். இந்தப் பகுதிகளில் சருமத்தின் தன்மை மாறியிருக்கலாம் அல்லது மாறாமலும் இருக்கலாம். பொதுவாக கரு உருவாகும் போது அந்த இடத்தில் சருமத்தின் செல்கள் அல்லது சிறு இரத்தக் குழாய்கள் சரியாக அமைக்கப்படாததால் இவ்வாறு ஏற்படுகிறது.
இவை உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம். இவற்றில் சில சருமத்தின் மேல்புரத்தில் தோன்றுகின்றன. சில சருமத்திற்கு அடியிலும் தோன்றுகின்றன.
பொதுவாக இத்தகைய பிறவிக் குறிகள் பிறக்கும் போதே தெரிந்துவிடும் அல்லது மிகச் சிறிய குழந்தையாக (5 வயதுக்கு முன்பாகவே) இருக்கும் போதே தெரியும். சிலருக்கு மிகச் சிறிய அளவில் இந்த அடையாளங்கள் இருந்தால் அவை முதலில் கண்ணுக்குத் தெரியாது. வளர வளரத் தெரியும்.
பிரிவுகள் மற்றும் வகைகள்:
இத்தகைய பிறவி அடையாளங்களை இரத்த நாளங்களைச் சார்ந்தவை – Vascular என்றும் பிக்மெண்ட் செல்களிலிருந்து ஏற்பட்ட திட்டுக்கள் சார்ந்தவை – Pigmented, எனவும் பிரிக்கலாம் (பிக்மெண்ட் பிரிவை சார்ந்தவை நமது சருமத்தின் நிறத்தை மெலனின் மூலம் கட்டுப்படுத்தும் மெலனோசைட்கள் என்றும் செல்களின் மூலம் உருவாகின்றன).
- நேவஸ்ஃப்ளேமஸ் (Port Wine Stains) – இத்தகைய Port Wine Stains- PWS அடையாளங்களை மருத்துவர்கள் “நேவஸ்ஃப்ளேமஸ்” என்று குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலும் இந்த PWS அல்லது fire marks ஏற்படும் அடையாளங்கள் நமது முகத்திலேயே தோன்றும். சில சமயங்களில் பிற பகுதிகளிலும் தோன்றும். பிறக்கும்போதே தட்டையாக, வெளிர் சிவப்பு நிறத்திலோ, இளம் பிங்க் நிறத்திலோ இருக்கும். பெரியவர்களாகும்போது அழுத்தமான சிவப்பாகவோ, ஊதா நிறமாகவோ மாறும், அங்குள்ள தோல் பகுதியும் கனமாக மாறிவிடுகிறது. சில சமயங்களில் லேசான கட்டிகள் போலத் தோன்றலாம். இரத்தம் கசியலாம். ஒருவேளை உதடுகள் அல்லது மூக்கு பாதிக்கப்பட்டிருந்தால் கொஞ்சம் வீங்கியிருக்கலாம். இவை தானாக மறைவதில்லை. பொதுவாக 1000 குழந்தைகளில் 3 குழந்தைகளுக்கு இத்தகைய பிறவி அடையாளங்கள் (போர்ட் வைன் நிற மருக்கள்) இருக்கலாம்.
- மேக்குலர் ஸ்டெயின்ஸ் – ஸ்டோர்க் பைட்ஸ் அல்லது ஏன்ஜல்ஸ் கிஸ்: இத்தகைய கரும்புள்ளிகள் / அடையாளங்களை மருத்துவரீதியாக நெவஸ் சிம்ப்ளெக்ஸ் என்று கூறுவார்கள். தட்டையாக, பிங்க் நிறத்தில், ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். மேகுலர் ஸ்டெயின் அல்லது ‘சால்மன் பேட்ச்’ என்பதை “ஏஞ்சல்ஸ் கிஸ்” (தேவதையின் முத்தம்) என்றும் கூறுவார்கள். இவை நமது நெற்றி, மூக்கின் மேடான பகுதி, கண் இமைகள், மேலுதடு ஆகிய பகுதிகளில் தோன்றும் போது இவ்வாறு குறிப்பிடுவார்கள். கழுத்தின் பின்புறம் இருந்தால் “ஸ்டோர்க் பைட்” என்று குறிப்பிடுவார்கள். 20%-60% வரை இவை பரவியிருக்கும். இந்த அடையாளங்களில் பெரும்பாலானவை குழந்தை பிறந்த முதல் ஆண்டிலேயே தானாகவே மறைந்துவிடும்.
- ஹீமேன்ஜியோமாஸ் – இவை நல்ல சிவப்பு நிறத்தில் சருமத்தில் மேலெழும்பிய கட்டிகளாகத் தோன்றும். சில மிகவும் மேலோட்டமாக சருமத்தின் மேல் பகுதியில் மட்டுமே இருக்கும் (ஸ்ட்ராபெர்ரி மார்க்ஸ்) சில சருமத்தில் மிக ஆழமாக இருக்கும். இவ்வகையில் ஏறக்குறைய 50% தலை அல்லது கழுத்துப் பகுதியில் தான் தோன்றும். வயதாக ஆக (90% வயதுக்குள்) இவை சுருள் போல சுருட்டிக் கொள்ளும். இவை அமைந்திருக்கும் இடத்தைப் பொருத்தே எந்த அளவு சிக்கலாக இருக்கும் என்பதை அறிய முடியும். சில சமயம் இவைசார்ந்து சில குறிப்பிட்ட அறிகுறிகளும் இருக்கும்.
- டெர்மல் மெலனோசைட்ஸ் – இவை தட்டையாக, நீலம்-கிரே வண்ணத்தில், சருமத்தின் மேல் பகுதியில் சிறு சிறு காயங்கள் போல இருக்கும். இவை நமது உடலில் அமைந்திருக்கும் இடத்திற்கேற்ப, தோல் மருத்துவர்கள், “மங்கோலியன் ஸ்பாட்ஸ்”, “நெவஸ் ஆஃப் ஓடா”, அல்லது “நெவஸ் ஆஃப் ஐடோ” என்பது போன்று வகைப்படுத்துவார்கள். நமது சருமத்தின் ஆழமான பகுதிகளில் விடாப்பிடியாக இயல்புக்கு மாறாக அடர்ந்திருக்கும் நிறமி செல்கள் (pigment cells) அல்லது மெலனோசைட்ஸ் காரணமாக இவை தோன்றலாம்.
- கான்ஜெனிடல் மெலனோசைடிக் நெவி (CMN) – CMN இவை தட்டையாகவோ சிறு கட்டிகள் போல் மேலெழும்பியோ காணப்படும் பிறவி அடையாளங்கள். இவை வெளிறிய பிரவுன் நிறத்திலிருந்து ஆழ்ந்த கருப்பு வரையான வண்ணங்களில் இருக்கும் பல வடிவங்களிலும் அளவுகளிலும் (1.5 செமிக்கு கீழானது முதல் 20 செமிக்கு மேலானதாக வரை) இருக்கலாம். சிலவற்றின் மீது முடிகூட வளர்ந்திருக்கும். நூற்றில் ஒருவருக்கு (1%) பிறவியிலேயே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட CMN இருக்கலாம். பொதுவாக குழந்தைக்கு 1 அல்லது 2 வயது ஆகும்போது வெளிறிப் போகலாம். சிலருக்கு, இவைசார்ந்து சில குறிப்பிட்ட அறிகுறிகளும் தோன்றலாம்.
- Café-au-lait spots: Cafe-au-lait macules (CALM) என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படும் இவ்வகைக் குறிகள் வெளிறிய பிரவுன் நிறத்தில் தட்டையாக, கோள வடிவத்தில் இருக்கும். இவை தோன்றுவது இனத்திற்கு இனம் மாறுபடும் (0.3%-18%) இவை 6க்கு மேல் ஒருவருக்குத் தோன்றினால் அவை “நியூரோஃபைப்ரோமெடாசிஸ்” என்பதன் அறிகுறிகளாக இருக்கலாம்.
பிறவி அடையாளங்கள் தோன்றக் காரணம் என்ன?
இத்தகைய பிறவிக் குறிகள் தோன்றுவதற்கான காரணங்களை மருத்துவம் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவற்றில் பெரும்பாலானவை எவ்வித குறிப்பிட்ட மருத்துவக் காரணமும் இன்றி எதேச்சையாகத் தோன்றுபவை. ஒரு சில பிறவிக்குறிகள் மட்டும், வேறு பெரிய மருத்துவ பிரச்சனைகளால் (சிண்ட்ரோம்) தோன்றலாம்.
- வேஸ்குலர் பிறவி அடையாளங்கள் – உடலில் இரத்தக் குழாய்கள், மிகச் சிறிய இரத்த நாளங்கள் ஆகியவை சரியாக உருவாகாமல் போனால் அப்போது இரத்த நாளங்களில் பிறவி அடையாளங்கள் (வேஸ்குலர்) தோன்றலாம். இவை ஒரே இடத்தில் குவிந்திருக்கலாம் அல்லது வழக்கத்திற்கு மாறாகப் பரவியும் இருக்கலாம்.
- பிக்மெண்டட் பிறவி அடையாளங்கள் – நமது சருமத்தில் உள்ள மெலனோசைட்கள் எனப்படும் செல்கள் மெலனின் என்னும் நிறமியை உற்பத்தி செய்கின்றன. நமது சருமத்தில் சில பகுதிகளில் இவை மிகவும் அடர்ந்து பெருகி விட்டால் அப்போது அடர் நிறத்தில் இத்தகைய பிக்மெண்டட் பிறவி அடையாளங்கள் உருவாகலாம்.
கண்டறிதல் & பரிசோதனைகள்
தோல் மருத்துவர் முதலில் நேரடியாக நன்கு பரிசோதித்துப் பார்ப்பார். தேவைப்பட்டால் சில இடங்களில் “டெர்மாஸ்கோப்” கருவி மூலமும் பார்ப்பார்.
மிக ஆழமாக இத்தகைய அடையாளங்கள் இருந்தால், அவர் சில பரிசோதனைகளைப் (அல்ட்ரா சவுண்ட், CT ஸ்கேன், MRI) பரிந்துரைக்கலாம். சில சமயங்களில் அவரது சந்தேகத்தைத் தீர்க்க “பயாப்ஸி” செய்யவும் சொல்லலாம்.
உங்களுக்கு இத்தகைய ஆபத்து ஏற்படுமா?
பெரும்பாலான பிறவி அடையாளங்கள் எவ்விதத் துன்பத்தையும் தராதவை. பெரும்பாலானவை நாளாக ஆக தாமாகவே வெளிறிப் போய் விடலாம் அல்லது சுருங்கிப் போய் விடலாம். ஆனால் அரிதாக சில சமயங்களில், இவை உடலின் ஆரோக்கியமான வளர்ச்சியைத் தடை செய்யலாம்; உடலின் இயக்கத்தைத் தடை செய்யலாம்; சில சமயங்களில் வேறு சில மருத்துவப் பிரச்சனைகளும் ஏற்படலாம்.
ஸ்ட்ராபெர்ரி மார்க்ஸ் எனப்படும் பிறவி அடையாளங்கள் சில சமயங்களில் திறந்த புண்ணாக மாறலாம். சில தொற்றுகள் ஏற்படுவதன் மூலம் இப்படி மாறலாம். இவை பரவலாக அதிகம் பேருக்குத் தோன்றலாம். இவை புற்றுநோயாக மாறும் வாய்ப்புக் குறைவுதான்.
தடுத்தல் மற்றும் இவற்றைக் கையாளுதல்
இத்தகைய பிறவி அடையாளங்கள் ஒருவருக்கு இருந்தால், அவற்றின் நிறம், அளவு அல்லது தன்மை போன்றவற்றில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாகக் கவனித்துப் பார்க்க வேண்டும். அவற்றில் வலி, இரத்தம் கசிதல், அரிப்பு அல்லது வீக்கம் போன்றவை இருந்தாலும் உடனடியாக தோல் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும்.
சிகிச்சை முறைகள்
தோல் மருத்துவர்களால் இத்தகைய பிறவி அடையாளங்களை நீக்க முடியும். பிறவி அடையாளங்களை நீக்குவதற்கான சிகிச்சைகள் அவற்றின் வகை, அளவு, தீவிரம், அவை அமைந்துள்ள இடம் இவை போன்று பல விஷயங்களின் அடிப்படையில் மாறுபடும். இவற்றை நீக்க, கீழ்க்கண்ட வகையான லேசர் சிகிச்சைகள் பெரும்பாலும் வழங்கப்படுகின்றன:
- Q-switched Nd:YAG லேசர்கள் – பிக்மெண்ட்டட் பிறவி அடையாளங்களை நீக்க
- பல்ஸ்ட் டை லேசர் – வேஸ்குலர் பிறவி அடையாளங்களுக்காக
பெரும்பாலும் பிறவி அடையாளங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதில்லை. நமது இயக்கத்தை அல்லது செயல்பாடுகளைத் தடுக்கக் கூடியவையாகவோ அல்லது தேவையற்ற அறிகுறிகளை வெளிப்படுத்துபவையாகவோ இருந்தால் மட்டும் அவற்றுக்கு சிகிச்சைகள் தேவைப்படலாம். தோல் மருத்துவர்கள் இத்தகைய பெரிய பிறவி அடையாளங்களை நன்கு பரிசோதித்து பிறகு அவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அனுமானித்து அதற்கேற்ற சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்கள்.
உங்கள் உடலில் பிறவி அடையாளங்கள் இருந்தால், கட்டாயமாக ஒரு தோல் மருத்துவரிடம் சென்று அவற்றைக் காண்பித்து, எதிர்காலத்தில் அவற்றால் எவ்வித சிக்கல்களும் ஏற்படாதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.